உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்
ஒவ்வொரு பெண்ணின் நிலைமையும் தனித்துவமானது என்பதால், உங்களது தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளைப் பற்றியும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றியும் கர்ப்பத்திற்கு முன்பாக மதிப்பிடுவதற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. உங்கள் மருத்துவர் கர்ப்பகாலப் பராமரிப்பு சார்ந்து உங்களுக்கு மட்டும் தனியாக வழங்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்குவார்.
கருவுறுதலில் உள்ள பிரச்சனைகள்
கருவுறுதலில் ஏதும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பொதுவாக, உங்களது 30 -களில் உங்கள் கருவுறும் தன்மை குறையத் தொடங்குகிறது. பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களது முட்டை வெளியீடு குறைவாகவோ அல்லது மிகவும் ஒழுங்கற்றதாகவோ இருக்கலாம். அவர்களது முட்டைகளைக் கருவுறச் செய்வது கடினமாக ஆகலாம். என்டோமெட்ரியோஸிஸ் எனப்படும் கருப்பை அகப்படலப் பிரச்சனைகள் மற்றும் ஃபெல்லோபியன் குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் அவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றன.
நீங்கள் கர்ப்பிணி ஆவதற்காக ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை முயற்சி செய்திருந்தால், உங்கள் வயது 35-க்கும் அதிகமாக இருந்தால், உங்கள் மருத்துவருடன் இதுபற்றி ஆலோசனை செய்யுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு சில நாட்கள் மட்டுமே கருத்தரிப்பு ஏற்படும். ஒரு மாதத்தில் கருவுறும் தன்மை அதிகம் கொண்ட நாட்கள் எவை என்பதை ஹோம் ஓவுலேஷன் கிட் மூலம் கண்டறிந்து, கர்ப்பம் தரிப்பதற்கான உங்கள் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
நீங்கள் கர்ப்பமாகவில்லை என்றால், உங்கள் மருத்துவரை சந்திக்கவும். அவர் சில பரிசோதனைகளை நடத்துவார். உங்கள் மருத்துவர் உங்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்தி விட்டாரென்றால், நீங்கள் கருவுறுவதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். கருவுறுதல் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீனமுன்னேற்றங்கள் வயதான பெண்கள் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளன.
கர்ப்பம் தொடர்பான ஆபத்துக்கள்
30-களின் பிற்பகுதியிலும் 40-களின் ஆரம்பப் பகுதியிலும் உள்ள பல பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தை அடைகிறார்கள் என்றபோதிலும், அவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்கான சில காரணிகளும் உள்ளன:
தாயாகும் வயது அதிகமாக இருத்தல். 35 வயதில், மருத்துவர்கள் நீங்கள் " அதிகப்படியான தாயாகும் வயதில்" இருப்பதாக குறிப்பிடுவதுடன், உங்கள் வயதை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக கருதுகிறார்கள்.
கருச்சிதைவுக்கான ஆபத்து. தங்கள் 20 -களில் இருக்கும் பெண்களுக்கு 15 சதவிகிதம் கருச்சிதைவுக்கான ஆபத்து உள்ளது என்றால், தங்கள் 40-களில் இருக்கும் பெண்களுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை கருச்சிதைவு ஏற்படலாம்.
சுகாதாரம் சார்ந்த அபாயங்கள். உயர் இரத்த அழுத்தம், கர்ப்பகால நீரிழிவு, இதய நோய்கள், நஞ்சுக்கொடி தடுக்கப்படுதல், பிரீக்லாம்ப்ஸியா மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் தாக்கும் அபாயங்கள் வயதான பெண்கள் கருத்தரிக்கும்போது ஏற்படுகின்றன.
பிரசவ வேறுபாடுகள். வயதான கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே பிரசவமாதல், நீண்டு தொடரும் பிரசவ வலி, சிஸேரியன் பிரசவம், குறைந்த எடை கொண்ட குழந்தை பிறத்தல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக வருகின்றன.
பல கருக்கள். கருவுறுதல் சிகிச்சைகளைப் பயன்படுத்தும் வயதான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வரும் சாத்தியமான சிக்கல்களோடு சேர்த்து, பல கருக்கள் தரிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. கருவுறுதல் சிகிச்சைகள் இல்லாவிட்டாலும் கூட, வயதான கர்ப்பிணிகள் இரட்டையர்கள் அல்லது மூவர்களைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
மேற்கண்ட பிரச்சனைகளுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தபோதிலும், உங்கள் அதிகமான வயது மட்டுமே இத்தகைய பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்று சொல்ல முடியாது. நவீன மருத்துவச் சிகிச்சைகள் அதிகமாகிவிட்ட தற்காலத்தில், நிலைமைகளை வெற்றிகரமாக நிர்வகிக்கவும் முடியும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews