முதல் சில வாரங்களில் உங்கள் குழந்தைக்கு 2 முதல் 3 மணி நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே ஒரு நாளின் 24 மணி நேரத்தில், உங்கள் குழந்தை 8 முதல் 12 தடவைகள் வரை தாய்ப்பால் அருந்தும். குறிப்பாக நீங்கள் பாலூட்டக் கற்றுக்கொள்ளும் போது, நீங்கள் நாள் முழுக்க தாய்ப்பால் கொடுப்பதைப் போலத் தோன்றும். ஒவ்வொரு பாலூட்டலும் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும். உங்கள் குழந்தை வளரும்போது, அதன் வயிற்றின் அளவும் அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொரு முறை பாலருந்தும் போதும் அது அதிக பாலை எடுத்துக்கொள்ளும். அதற்காக பயப்படத் தேவையில்லை. வயிறு வளர்வதால்தான் குழந்தைகள் ஒவ்வொரு3 முதல் 4 மணிநேர இடைவெளியில் பாலுக்காக அழுகிறார்கள். உங்கள் குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுங்கள். எவ்வளவு நேரத்துக்கு அது பால் குடிக்க விரும்புகிறதோ, அவ்வளவு நேரத்துக்கு பாலூட்டவும். இரவிலும் கூட நீங்கள் பாலூட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ந்து முதிர்ச்சியடையும் போது, பாலூட்டும் எண்ணிக்கையும் குறைகிறது.
கால அட்டவணை போட்டு பாலூட்டுவது ஆரம்பத்தில் பயனுள்ளதாகத் தோன்றலாம். ஆனால் குழந்தையின் தேவைக்கு ஏற்றார்போல் பாலூட்டி, மற்ற கால அட்டவணைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவதுதான் எளிதாக இருக்கும். நீங்கள் தாய்ப்பால் ஊட்டக் கற்றுக்கொள்ளும் போது, உங்கள் குழந்தையும், தாய்ப்பால் குடிக்க கற்றுக்கொள்கிறது. வழக்கமான கால அட்டவணையை ஒட்டியே பால் கொடுக்க வேண்டும் என்ற மன அழுத்தம் உங்களுக்குத் தேவையில்லை. நாளாக ஆக தானாகவே எல்லாம் சரியாக அமையும் என்பது உறுதி. முழுமையாக தாய்ப்பாலில் வாழும் ஆரோக்கியமான குழந்தைகள், தங்களுக்கு எப்போது பால் தேவை, எவ்வளவு நேரம் பால் குடிக்க வேண்டும், எந்த அளவுக்கு பால் குடிக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு உணர்த்திவிடுவார்கள்.
உங்கள் குழந்தை சரியாக வளர்ச்சியடைந்து மேம்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள, உங்களுடைய உள்ளூர் சமூகநல நர்ஸ், பொது மருத்துவர் அல்லது குழந்தை நல மருத்துவரைச் சந்தித்து, உங்கள் குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சிக்கான வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது நல்லது. ஒரு பிரச்சனை இருக்கிறது என நீங்கள் உணர்ந்த உடனேயே, உங்கள் உறவினர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளை நாடிவிடவேண்டும். ஆரம்பத்திலேயே பிரச்சனைகள் பற்றி விவாதிப்பது, எப்போதும் மிக நல்ல விளைவுகளை அளிக்கிறது.
மொத்தமாக பால் அருந்துதல்
உங்கள் குழந்தை சில சமயம் மொத்தமாக, நிறைய பாலருந்துவதைக் கவனிக்கலாம். குறிப்பாக, புதிதாகப் பிறந்த பச்சிளம் சிசுவாகவோ அல்லது குறைவான பிறப்பு எடை கொண்ட சிசுவாகவோ இருந்தால், அது இப்படி பாலருந்தும். இதன் பொருள், சிலநேரங்களில் குழந்தைக்கு அதிகப்பால் தேவை, சிலநேரங்களில் குறைவான பாலே போதும் என்பதாகும். இதுபோன்ற பால் அருந்துதல், பின் பிற்பகலிலோ அல்லது மாலை நேரத்தின் ஆரம்பத்திலோ நிகழும். சிலநேரம் குழந்தையின் நீண்ட தூக்கத்திற்கு அது வழிவகுக்கும். மொத்தமாகப் பால் அருந்திவிட்டு, நெடுநேரம் தூங்கும் குழந்தைக்கு பால் தேவையில்லை என்று அர்த்தமில்லை. புதிதாகப் பிறந்த பச்சிளம் சிசுவாகவோ அல்லது குறைவான பிறப்பு எடை கொண்ட சிசுவாகவோ இருந்தால், அதன் உணவுமுறையே அப்படித்தான் அமைகிறது. தாய்ப்பால் அருந்தும் குழந்தை பசியாக இருந்தால் மட்டுமே பால் குடிக்கும். தேவைக்கு அதிகமாக அதற்கு பாலூட்டுவது கடினமான காரியம்.
வளர்ச்சிக்காக பாலருந்துதல்
குழந்தை வேகமாக வளர்ச்சியடையும்போது அதற்கு அதிகம் பால் தேவைப்படும். புதிதாகப் பிறந்த பச்சிளம் சிசுக்களும், குறைவான பிறப்பு எடை கொண்ட சிசுக்களும் செய்யும் மொத்தமான பாலருந்துதலுடன் இதை ஒப்பிடக் கூடாது. இதுபோன்ற வளர்ச்சிக்கான பாலருந்துதலை குழந்தை பிறந்து இரண்டு முதல் மூன்று வாரங்கள், ஆறு வாரங்கள் மற்றும் மூன்று மாதங்களில் நீங்கள் எதிர்பார்க்கலாம். இரண்டு நாட்கள் தேவைக்கு ஏற்றார்போல் பாலூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்தக் கட்டத்தை நீங்கள் கடந்து விட்டீர்கள் என்று பொருள். அப்போதிலிருந்து, தேவைக்கேற்ப பாலூட்டுவதற்கான சமநிலை மீண்டும் தொடர்கிறது.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews