கர்ப்பகாலத்தின் 6 முதல் 12 வாரங்களுக்கு இடையில் உங்களின் முதல் மருத்துவச் சந்திப்பு இருக்கும். இந்த நேரத்தில்தான் உங்கள் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் முழுஅளவில் தெரியவரும். இப்போது உங்களுக்கு ஏற்கனவே குமட்டல், வாந்தியெடுத்தல் போன்ற மசக்கை அறிகுறிகள் வந்திருக்கும். எனவே, உங்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் உங்கள் மருத்துவச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
உங்கள் முதல் சந்திப்பில் மருத்துவர் உங்களிடம் கேட்கக்கூடிய விஷயங்கள்.
உங்கள் கடைசி மாதவிடாய் தேதி (LMP): உங்கள் கடைசி மாதவிடாய் தேதியை மருத்துவர் கேட்கலாம். அதை வைத்துதான், உங்களது எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியை (EDD) அவரால் கணக்கிட முடியும்.
உங்கள் முந்தைய மகப்பேறு பற்றிய வரலாறு: உங்கள் முந்தைய மகப்பேறு வரலாற்றையும், உங்களுக்கு முன்பு பிறந்துள்ள குழந்தைகள், கருச்சிதைவுகள் அல்லது கருக்கலைப்புகள் பற்றியும் மருத்துவர் கேட்பார். இந்த விவரங்கள், உங்கள் கர்ப்பகால பராமரிப்பிற்கும், பிரசவத்தினை திட்டமிடுவதற்கும் மருத்துவருக்கு உதவிகரமாக இருக்கும்.
உங்களுக்கு ஏற்கனவே டி.பி., ஆஸ்துமா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்திருந்தால், அவற்றின் வரலாறு பற்றியும் மருத்துவர் கேட்பார்.
உங்களுக்கு ஏதேனும் மருந்து ஒவ்வாமைகள் இருந்தால், அதுபற்றி அவரிடம் தெளிவாகத் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் அவர் உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளைத் தராத மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும்.
பெற்றோர் இருவருடைய நோய் பற்றிய வரலாறு: கர்ப்பிணித் தாய் மற்றும் தந்தையின் நோய் வரலாறுகளைப் பற்றி மருத்துவர் விசாரிப்பார். சிசுவின் வளர்ச்சிக்கு உதவுவதில், இந்த தகவல்கள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், தாய்க்கு வரக்கூடிய ஆபத்துகளைப் பற்றிய சரியான மதிப்பீட்டை அவளுடைய நோய் வரலாற்றின் அடிப்படையில்தான் சரியாகச் செய்யமுடியும்.
குடும்ப நோய் அல்லது மரபணு வழியான நோய்கள்: இது பற்றிய தகவல்கள் வளரும் கருவிற்கு வர இருக்கும் அபாயங்களைக் கண்டறிய உதவுகின்றன. இதனால், கர்ப்பிணித் தாய்க்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ள நோய்கள் பற்றி முன்கூட்டியே சோதித்துப் பார்த்து, சரியான தடுப்புச் சிகிச்சைகளை மருத்துவரால் மேற்கொள்ள முடியும்.
கண்டறியும் மருத்துவச் சோதனைகள்: டவுன் சிண்ட்ரோம் மற்றும் ஸ்பைனா பிஃபைடா போன்ற மரபணு வழியான நோய்கள் உங்களுக்கு இருக்கிறதா என்றும் சோதிக்கப்படும். உங்கள் குடும்பமோ அல்லது உங்கள் கணவர் குடும்பமோ ஏதாவது பரம்பரை மரபணு நோய்களின் வரலாற்றைக் கொண்டிருந்தால், உங்கள் மருத்துவர் உங்களுக்கும் அந்த நோய்கள் தாக்கும் ஆபத்து இருக்கிறதா என்று சோதிக்க விரும்புவார். கர்ப்பத்தின் 10 முதல் 12 வாரங்களுக்குள் உங்கள் நஞ்சுக்கொடியில் இருந்து சிறிய மாதிரி ஒன்றை எடுத்து சி.வி.எஸ் (கொடிய நோய்க்கான மாதிரிச் சோதனை) செய்யப்படும். மேலும், உங்கள் கர்ப்பத்தின் 16 ஆவது வாரத்தில் கருப்பையில் உள்ள அம்னியோடிக் திரவத்தின் சிறிய மாதிரியை ஒரு சிரிஞ்ச் வழியாக எடுத்து அம்னியோசென்டிஸிஸ் என்ற சோதனையைச் செய்வதற்கும் மருத்துவர் ஏற்பாடு செய்வார்.
இரத்தப் பரிசோதனைகள்: ஹீமோகுளோபின் அளவு, ஆர்.பி.சி எண்ணிக்கை, இரத்த வகை, ஆர்.ஹெச் வகை, ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ்-பி, வி.டி.ஆர்.எல், சர்க்கரை, தைராய்டு மற்றும் பிற பொதுவான நோய்களின் தாக்கங்கள் பற்றி அறிவதற்கான இரத்தப் பரிசோதனைகளைச் செய்யும்படி மருத்துவர் பரிந்துரைப்பார்.
சிறுநீர் பரிசோதனைகள்: உங்கள் சிறுநீரின் மாதிரியைப் பெற்று, அதைச் சோதிப்பதன் மூலம் உங்கள் புரதத்தின் அளவு அல்லது வேறு ஏதாவது நோய்த் தொற்றுக்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்: கர்ப்பத்தின் தற்போதைய நிலையையும், எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியையும் (EDD) அறிய உங்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிந்துரைக்கப்படும். இதன்மூலம் உங்கள் கருவின் வளர்ச்சியையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இரட்டைக் குழந்தைகளைக் கண்டறியும் அல்ட்ராசவுண்ட்: நீங்கள் இரட்டையர்களுடன் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சந்தேகப்பட்டால், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுத்து அதில் இரட்டைக் கருக்கள் வளர்வதைக் காண்பதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதை உறுதிப்படுத்த டாப்ளர் இதயத்துடிப்பு எண்ணிக்கை சோதனையையும் உங்கள் மருத்துவர் செய்ய விரும்புவார். இந்தச் சோதனை, இரட்டை இதயத் துடிப்புகளை அடையாளம் காண உதவுகிறது.
இரத்த அழுத்தம்: உங்கள் இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டு, அதுவே அடுத்துவரும் கர்ப்பகால மருத்துவச் சந்திப்புகளுக்கான அடிப்படையாக வைத்துக்கொள்ளப்படும்.
உங்கள் உயரம் மற்றும் எடை: உடல் எடை மற்றும் உயரத்தை அளந்து, உங்கள் உடல் நிறை குறியீட்டை (பி.எம்.ஐ) மருத்துவர் கணக்கிடுவார். உங்கள் பி.எம்.ஐ 30 -ஐ விட அதிகமாக இருந்தால், அது உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு வருவதற்கான அபாயத்தைக் குறிக்கிறது. அந்த நீரிழிவு வராமல் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள்.
உங்கள் வாழ்க்கைமுறை: உங்கள் வாழ்க்கைமுறை பற்றி மருத்துவர் விசாரிப்பார். உங்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கமோ, குடிப்பழக்கமோ இருந்தால் அவற்றைத் தவிர்க்கும்படி நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். மேலும், உங்கள் வாழ்க்கையைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான மாற்றங்களைச் செய்யும்படியும் அவர் கேட்டுக்கொள்வார். நீங்கள் கர்ப்பகாலத்தில் செய்வதற்கான உடற்பயிற்சிகளையும், சில உணவுக் கட்டுப்பாடுகளையும் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.
கர்ப்பகால மருத்துவ அட்டை: உங்கள் எதிர்கால மருத்துவச் சந்திப்புகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய கர்ப்பகால மருத்துவ அட்டை தயாரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும்.
உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.
கர்ப்பம் மற்றும் ஆரோக்கியம் குறித்து உங்கள் மனதிலுள்ள எல்லாக் கேள்விகளையும் மருத்துவரிடம் கேட்கலாம். அவரிடம் பேசுவதற்குத் தயங்காதீர்கள். உங்கள் உணவுத் திட்டம், உடற்பயிற்சிகள், உடல்நலம், சிசுவின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி எல்லாம் கலந்தாலோசித்து, அனைத்துச் சந்தேகங்களையும் நீக்கிக்கொள்ளுங்கள்.
உங்கள் முதல் மருத்துவச் சந்திப்பு முடிந்து புறப்படுவதற்கு முன்னர், இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது என்பதையும், இதன்மூலம் தான் உங்கள் மருத்துவர் உங்கள் சிசுவின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்கிறார் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது எல்லா சந்தேகங்கள் பற்றியும் அவரிடம் கலந்தாலோசியுங்கள். அவ்வாறு செய்வது, உங்களது தற்போதைய நிலைமையைச் சரியாக மதிப்பிட உதவும்.
English | Tamil | Hindi | Telugu | Bengali | Marathi |
0 reviews